கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலையில், 1964ல் அமைக்கப்பட்ட சிப்காட் வளாகம் தற்போது, 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுடன் செயல்படுகிறது. இங்கு, அடிப்படை வசதிகளான சாக்கடை கால்வாய் இல்லை, அள்ளாமல் தேங்கி கிடக்கும் குப்பை, சாக்கடை கழிவால் துர்நாற்றம் வீசுவதோடு, குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது.இது குறித்து அங்கு தொழிற்சாலைகள் நடத்துவோர் கூறியதாவது:தொழில் வளர்ச்சி குறித்து மத்திய, மாநில அரசுகள் பேசி வரும் நிலையில், மாவட்ட தலைநகர் கிருஷ்ணகிரியிலுள்ள சிப்காட் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. மாறாக விதிமுறைகளை மீறி, வணிக வளாகங்கள், ேஹாட்டல்கள் கட்டுவது மட்டும் தான் அதிகரித்துள்ளது.ஆனால், அதன் கழிவுநீர் செல்லக்கூட வழியில்லை. குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதில், இறந்து கிடக்கும் நாயை கூட, இரு நாட்களாகியும் சிப்காட், நகராட்சி பஞ்., நிர்வாகம் அகற்றவில்லை. இதை பராமரிப்பதில் சிப்காட் நிர்வாகம், நகராட்சி, பஞ்., நிர்வாகங்களுக்குள் போட்டா போட்டி நடக்கிறது.ஏனெனில் இப்பகுதி கிருஷ்ணகிரி நகராட்சி, கட்டிகானப்பள்ளி பஞ்., எல்லைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி டவுன், தாலுகா போலீஸ் எல்லைகளுக்கு நடுவிலும் அமைந்துள்ளது. இங்கு, மாலை முதல் விடிய விடிய குடிமகன்கள் தொல்லை அதிகரித்துள்ளது. பணிக்கு வரும் பெண்களிடம் சில்மிஷம் செய்வதும், தகராறில் ஈடுபடுவதும், தட்டி கேட்பவர்களை தாக்குவதும் வாடிக்கையாக உள்ளது. புகார் அளிக்க சென்றால் கூட, போலீசார் வாங்க மறுக்கின்றனர்.இது குறித்து, தமிழக முதல்வர் வரை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன் பட்டப்பகலில் டூவீலர்கள் திருட்டு, அலுவலகங்களை உடைத்து திருட்டு நடந்துள்ளது. இது குறித்து, 'சிசிடிவி' ஆதாரத்துடன் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.தண்ணீர் இல்லை, சாக்கடை கால்வாய் இல்லை, குப்பை அள்ளுவது இல்லை, திருட்டு தொல்லை என, தொழிற்சாலைகள் செயல்பட முடியாத வகையில் பல தொல்லைகள் உள்ளன. இதன் பின்னணியில் ஆளும்கட்சியினர் இருக்கின்றனரோ என்ற சந்தேகமும் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து, நடவடிக்கை எடுப்பார்களா என்பதும் சந்தேகமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் வேதனையுடன் கூறினர்.