கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கோடைக் காலத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையினை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடை யில் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், 73.54 எம்.எல்.டி., நீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கிராம ஊராட்சிகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் சொந்த ஆதாரங்கள் மூலம், குடிநீர் வினியோகம் நடக்கிறது. சில இடங்களில், சாலை பணிகள் நடந்து வரும் நிலையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, அவற்றை உடனடியாக பழுது நீக்கம் செய்து, குடிநீர் வினியோகம் நடக்கிறது. குறைந்த மின்னழுத்தத்தால், போதிய குடிநீர் வழங்க இயலாத குக்கிராமங்களுக்கு, போதிய மின்னழுத்தத்துடன் கூடிய மின்சாரம் வழங்க, மின்பகிர்மான கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழுதடைந்த குடிநீர் குழாய்களை பழுது நீக்கம் செய்வதற்கான மதிப்பீடுகளை உடனடியாக தயார் செய்து, குடிநீர் தடையின்றி வழங்க பொறியாளர்களுக்கும் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., மற்றும் பி.டி.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.