தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அலசெட்டியைச் சேர்ந்தவர் திம்மராயப்பா, 42, விவசாயி. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு கால்நடைகளுக்கு தீவனம் வைக்க வீட்டின் பின்புறம் சென்றார். அங்கு நின்றிருந்த ஒற்றை யானை, அவரை தாக்கியதில் பலியானார்.அதுபோல, ஏப்., 13ல், நாராயணப்பா, 71, 18ல், மூகண்டகா சித்தலிங்கப்பா, 64, கடந்த, 2ல், அப்பைய்யா, 55, கடந்த, 10ல், ஆலஹள்ளி ராஜேந்திரன், 48, ஆகியோர் இந்த ஒற்றை யானை தாக்கி பலியாகினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் விவசாயி திம்மராயப்பாவும் யானை தாக்கி பலியானது, உறவினர்கள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது.இதனால் நேற்று காலை, தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் வனத்துறை சோதனைச்சாவடி முன், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, யானைகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க, சோலார் வேலி அமைக்க வேண்டும்; இறந்த விவசாயிகளின் குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தினர். ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி ஆகியோர், எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் மற்றும் பொதுமக்களிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.யானை தாக்கி பலியான திம்மராயப்பா குடும்பத்திற்கு முதற்கட்டமாக, வனத்துறை சார்பில் இழப்பீடு தொகையாக, 50,000 ரூபாய் வழங்கப்பட்டது.