கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணையில் இருந்து, முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து, முதல்போக சாகுபடிக்கு தண்ணீரை திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று காலை, காங்., எம்.பி., கோபிநாத் முன்னிலையில், கலெக்டர் சரயு, கே.ஆர்.பி., அணையின் வலது மற்றும் இடது புற வாய்க்கால் மூலம் தண்ணீரை திறந்து வைத்து மலர் துாவினார். பின் கலெக்டர் சரயு கூறியதாவது: மொத்தம்,9,012 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில், இன்று (நேற்று) முதல் நவ., 11 வரை, 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. வலதுபுற வாய்க்காலில் வினாடிக்கு, 75 கன அடியும், இடதுபுற வாய்க்காலில், 76 கன அடியும் என மொத்தம், 151 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 16 பஞ்சாயத்துகள் பயன்பெறுகின்றன. தற்போது அணையில், 49.10 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு, 303 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. ஊற்று வாய்க்கால் மூலம், 12 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன், உதவி பொறியாளர் சையத், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் உள்பட பலர் பங்கேற்றனர்.