| ADDED : ஜன 19, 2024 12:03 PM
ஓசூர்: ஓசூரில் வக்கீல் வீட்டில், 30 பவுன் தங்கம், 1.50 கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ஹரிநாத், 40, வக்கீல்; இவர், திருப்பதி, ஷீரடி போன்ற ஆன்மிக தலங்களுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். பொங்கல் விடுமுறையையொட்டி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் ஷீரடிக்கு கடந்த, 13ல் சென்றார். அவர் வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கடந்த, 15ல் இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த, 30 பவுன் நகைகள், 1.50 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.வீடு திறந்து கிடந்ததை மறுநாள் பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது சகோதரர் ஜெகதீஷ், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.