| ADDED : மார் 18, 2024 03:44 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளி அருகே மலை மீது, பிரமராம்பா தேவி உடனுறை சிடில மல்லிகார்ஜூன சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, மல்லிகார்ஜூன துர்க்கம் கிராமத்தில் நேற்று காலை எருது விடும் விழா நடந்தது. இதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, கர்நாடகாவில் இருந்தும் என, 700க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. விழா திடலில் ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. அதை அடக்கி, அதன் கொம்பில் கட்டியிருந்த தடுக்குகளை இளைஞர்கள் பறித்தனர். அப்போது, 55 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில், 7 பேர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டனர். மற்றவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின் அனுப்பப்பட்டனர்.விழா முடிந்த பின், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரே நேரத்தில் தங்களது ஊர்களுக்கு வாகனங்களில் திரும்பியதால், தேன்கனிக்கோட்டை நகருக்குள் சில மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் நெரிசலில் சிக்கியது. இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார், நெரிசலை சரி செய்து ஆம்புலன்ஸ் வாகனம் உடனடியாக செல்ல ஏற்பாடு செய்தனர்.