தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா, அத்திமரத்துாரை சேர்ந்தவர் முரளி, 28. இவரது மனைவி மஞ்சுளா, 24. இவர்களுக்கு மூன்றரை மாத பெண் குழந்தை இருந்தது. காய்ச்சலால் குழந்தை பாதிக்கப்பட்ட நிலையில், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்து கடந்த 8ம் தேதி காலை, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது.இது குறித்து போலீசார் மற்றும் அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல், குழந்தையின் சடலத்தை பெற்றோர் அடக்கம் செய்தனர். தகவலறிந்த அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சந்திரமவுலி புகாரில், முரளி, மஞ்சுளா மீது வழக்கு பதிவு செய்து அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஐந்து வயதிற்குட்பட்ட எந்த குழந்தையாக இருந்தாலும், நோய் வாய்ப்பட்டு அல்லது திடீரென உயிரிழந்தால், எந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது என்பதை அறிய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.அதை அறிந்தால் தான், வரும் காலங்களில் அதுபோன்ற நோயால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும். அதனால் தான் தமிழகம் முழுதும் ஒவ்வொரு குழந்தையையும் கண்காணித்து வருகிறோம்.மூன்றரை மாத பெண் குழந்தை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், காய்ச்சல் ஏற்பட்டு ஒரு குழந்தை இறக்க வாய்ப்பு குறைவு. அது எந்த வகையான காய்ச்சல், உண்மையில் காய்ச்சல் பாதிப்பு தான் உயிரிழப்புக்கு காரணமா என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இது தொடர்பாக, பெற்றோர் தகவல் தெரிவித்திருந்தால், நாங்கள் உயிரிழப்பிற்கான காரணத்தை அறிந்திருக்க முடியும். சம்பந்தப்பட்ட பெற்றோர் தகவல் தெரிவிக்கவில்லை. அதனால் தான், போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.
ஒரு மாதம் சிறை
குழந்தை இறப்பை மறைத்த பெற்றோர் மீது, இந்திய தண்டனை சட்டம் 176 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது குழந்தை இறந்த தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுக்க தவறியதாக, பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட பிரிவில், ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம், இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என, போலீசார் தெரிவித்தனர்.