பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, சேர்வராயன் மலை ஏற்காடு பின்புறத்தில் வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 65.27 அடியாகும். இதன் மூலம் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், தென்கரை கோட்டை, பறையப்பட்டி, ஓந்தியாம்பட்டி, அதிகாரப்பட்டி ஏரிகள் உள்ளிட்ட, 17 கிராமங்களில், 30 கி.மீ., தொலைவு வரையுள்ள, 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த அணை, ஆண்டிற்கு இருமுறை முழு கொள்ளளவும் நிரம்பினால் மட்டுமே, அனைத்து விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கடந்தாண்டு இதே நாளில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு பருவ மழை பொய்த்து சராசரியை விட, 60 சதவீதம் குறைந்து போனதால், அணை முழுமையாக நிரம்பவில்லை. இதனால், இந்தாண்டு குறிப்பிட்ட நாளில் அணை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, அணையில், 40 அடி தண்ணீர் உள்ளது. ஆனால், அணை, 46 அடி வரை நிரம்பினால் மட்டுமே, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கபட வேண்டும் என்பது அரசு விதியாக உள்ளது. இதனால், பாசன விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, வாணியாறு பாசன நீரை பயன்படுத்தும், 7 விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளதாவது:தற்போது அணையில் இருக்கும், 173 மில்லியன் கன அடி நீரில், எதிர்கால தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் எப்போதும் அணையில், 23 மில்லியன் கனஅடி நீர் இருக்க வேண்டும். மீதமுள்ள, 150 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இது திறக்கப்படவில்லை எனில், ஆவியாதல், நீர் இழுப்பு மூலமாக தண்ணீர் வீணாகும் வாய்ப்பு உள்ளது.எனவே, 80 மில்லியன் கன அடி நீரை, பழைய ஆயக்கட்டு விவசாயிகளுக்காகவும், 70 மில்லியன் கன அடி நீரை, புதிய பாசன விவசாயிகளுக்காகவும், திறந்து விட வேண்டும். இதனால் வறட்சி பாதித்துள்ள நிலையில் கால்நடைகள், விவசாயிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடவும் முடியும். எனவே, விவசாயிகள் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் அரசு விதிகளை தளர்த்தி, வாணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.இவ்வாறு, அவை தெரிவித்துள்ளன.