| ADDED : ஏப் 27, 2024 06:50 AM
ஓசூர் : ஓசூர் வட்டார வேளாண் மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி, வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர் வட்டார விவசாயிகள் சித்திரை, வைகாசி மாதங்களில் பெய்யக்கூடிய மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்ய வேண்டும். அப்படி செய்தால், மண்ணின் அடியில் உள்ள பயிர்களை உண்ணும் பூச்சிகள் மற்றும் பல நோய்களை கடத்தும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டு புழுக்கள் ஆகியவை வெளியே வந்து, சூடான வெயிலில் பட்டு அழிந்து விடும். மேலும், பறவைகள் புழுக்களை கொத்தி தின்று அழித்து விடும். அதன் பின் சாகுபடி செய்யும் பயிரில் பூச்சி, நோய் தாக்குதலை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த முடியும்.மண்ணில் இறுக்கம் குறைந்து, மழை நீர் எளிதில் ஊடுருவி, மண்ணில் நைட்ரஜன் சத்து இயற்கையாக நிலை நிறுத்தப்படுகிறது. மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுவதால், மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. நன்கு ஆழமாக உழவு செய்யும் போது, கீழ் மண் மேலாகவும், மேல் மண் கீழாகவும் மாறும். அதனால், மண்ணில் உள்ள சத்துக்களை சீராக பயிர்கள் எடுத்து கொள்ள முடியும். மண்ணில் உள்ள களைகளின் விதைகள் முளைத்து செடிகளாக வளர்கிறது. இதை மறு உழவு செய்யும் போது, களை செடிகள் மக்கி மீண்டும் களைகள் வளராமல் தடுக்கப்படும். கோடை உழவு செய்த பின், மண் மாதிரி எடுத்து ஆய்விற்கு அனுப்பும் போது, ஆய்வு முடிகள் சரியாக இருக்கும். மண்வளம் மற்றும் சத்து மேலாண்மை எளிதாகும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.