உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தரமான விதைகளை பயன்படுத்த வேளாண் அலுவலர் வேண்டுகோள்

தரமான விதைகளை பயன்படுத்த வேளாண் அலுவலர் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி:தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என, கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் லோகநாயகி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள், விதை உற்பத்தி செய்ய, சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும். சான்று விதை என்பது குறிப்பிட்ட தர நிர்ணயத்திற்குள் புறத்துாய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றை கொண்டதாகும். புறத்துாய்மை பரிசோதனையில், துாய விதை, பிற தானிய விதை, உயிரற்ற பொருட்கள் மற்றும் களை விதை ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் விதை துாய்மையானதாக இருக்கும். புறத்துாய்மை பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளான முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகியவை, குறைந்த செலவில் பரிசோதனை செய்து தரப்படுகிறது. விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதைக் குவியலில் இருந்து விதை மாதிரி எடுத்து, விதை மற்றும் ரகம், பெயர், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முகப்பு கடிதத்துடன் ஒரு விதை மாதிரிக்கு, 80 ரூபாய் என்ற விகிதத்தில், வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண் இணை இயக்குனர் அலுவலக வளாகம், கலெக்டர் அலுவலகம் பின்புறம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி, விதை பரிசோனை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ