கே.ஆர்.பி., அணை கூட்ரோடு கால்வாயில் கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம்
கிருஷ்ணகிரி, நவ. 12-கே.ஆர்.பி., அணை கூட்ரோடு அருகே, பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் மூட்டை, மூட்டையாக கொட்டப்படும் குப்பையால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கிருஷ்ணகிரி ஒன்றியம், கே.ஆர்.பி., அணை கூட்ரோட்டில் இருந்து, திம்மாபுரம் செல்லும் சர்வீஸ் சாலையோரம், கே.ஆர்.பி., அணையிலிருந்து திம்மாபுரம் ஏரிக்கும், வயல்வெளிகளுக்கும் தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாய் மற்றும் இதையொட்டிய சர்வீஸ் சாலையோரத்திலும், அப்பகுதியினர் குப்பை கொட்டி வருகின்றனர். மேலும் அப்பகுதி ஓட்டல்கள், சாலையோர உணவு கடைகள், மீன் வறுவல் கடைகளில் சேகரமாகும் இறைச்சி கழிவுகளை மூட்டை மூட்டையாக கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பாசனத்திற்கு செல்லும் தண்ணீர் மாசடைந்து, தண்ணீர் செல்வதும் தடைபடுகிறது. இதனால், கே.ஆர்.பி., அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இச்சாலையை, முகம் சுளித்தபடி கடந்து சென்று வருகின்றனர். எனவே, இப்பகுதியில் குப்பை கொட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவும், கொட்டியுள்ள குப்பையை உடனே பஞ்., நிர்வாகம் அகற்றவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.