உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண் பார்க்க தம்பதியரை அழைத்து நகை பறிப்பு :கர்நாடகா மோசடி கும்பல் கைவரிசை

பெண் பார்க்க தம்பதியரை அழைத்து நகை பறிப்பு :கர்நாடகா மோசடி கும்பல் கைவரிசை

கிருஷ்ணகிரி : இன்டர் நெட் தொடர்பு மூலம் மகனுக்கு பெண் பார்க்க கிருஷ்ணகிரி வந்த ஆந்திரா தம்பதியரிடம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மர்ம கும்பல் நகை மற்றும் பணத்தை பறித்து சென்றனர். ஆந்திரா மாநிலம் ஹைதாரபாத்தை சேர்ந்தவர் பாரத்ஜிரெட்டி (59). இவரது மனைவி அருணா (51). மகன் பாரத்ரெட்டி(27). இவர் மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனில் உற்பத்தி பிரிவில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.பாரத்ரெட்டிக்கு திருமணம் செய்ய முடிவு செய்த அவரது பெற்றோர், இன்டர்நெட்டில் பெண் தேடி வந்தனர். கிருஷ்ணகிரி மாருதி நகரில் வசிப்பதாக கூறிய ஜோதிரெட்டி என்பவர் பாரத்ரெட்டிக்கு ஏற்ற பெண் கிருஷ்ணகிரியில் உள்ளதாக இன்டர்நெட் மூலம் தகவல் அளித்தார். அழகான ஒரு பெண்ணின் ஃபோட்டோவையும் நெட்டில் அனுப்பியுள்ளார். பெண் பார்பது குறித்து இரு தரப்பினரும் இன்டர்நெட் மூலம் தகவல்களை பரிமாறி கொண்டிருந்தனர். இறுதியில் ஜோதிரெட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள பெண்ணை பார்க்க பாரத்ரெட்டியின் பெற்றோர், கிருஷ்ணகிரிக்கு வருமாறு அழைத்துள்ளார். இந்த அழைப்பின் பேரில் கடந்த 3ம் தேதி பாரத்ஜிரெட்டி அவரது மனைவி அருணா ஆகியோர் விமானம் மூலம் பெங்களூரு வந்து, காரில் கிருஷ்ணகிரிக்கு வந்தனர். கிருஷ்ணகிரியில் அவர்கள் தங்குவதற்காக ஜோதி ரெட்டி என்பவர் பெயரில் நகரின் மையப்பகுதியில் உள்ள ஹோட்டல் 'வேலன் இண்டர்நேஷனல்' லாட்ஜில் ரூம் புக் செய்யப்பட்டிருந்தது. கடந்த 3ம் தேதி மாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரி வந்த பாரத்ஜிரெட்டி தம்பத்தியினர் நேராக லாட்ஜிக்கு சென்றனர். அங்கு அவர்களை ஜோதிரெட்டியின் பெயரை சொல்லி வரவேற்ற இரு ஆண்கள் அறையில் தங்க வைத்தனர். அப்போது, பாரத்ஜிரெட்டிக்கும் அவரது மனைவி அருணாவுக்கும் மர்ம நபர்கள் குளிர்பானம் கொடுத்தனர். அதை குடித்தவுடன் தம்பதியர் இருவரும் மயமாக்கிவிட்டனர். அப்போது அறைக்கு உள்ளேயும், வெளியேயும் நடமாடிய மர்ம நபர்கள் சிறிது நேரத்தில் அறையை சாத்தி விட்டு லாட்ஜை விட்டு வெளியேறினர். இரவு முழுவதும் மயங்கி கிடந்த தம்பதியர் நேற்று முன்தினம் (ஆக.,4) காலை மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்துள்ளனர். அப்போது அருணா கழுத்து மற்றும் கையில் அணிந்திருந்த எட்டு பவுன் நகை மற்றும் சூட்கேசில் இருந்த 8,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை காணாமல் போனது தெரிந்தது. இது குறித்து பெற்றோர் மும்பையில் உள்ள தன் மகன் பாரத்ரெட்டிக்கு மொபைல்ஃபோன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று மதியம் பாரத்ரெட்டி கிருஷ்ணகிரிக்கு வந்து டவுன் போலீஸில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் பாரத்ரெட்டியின் பெற்றோரிடமும், லாட்ஜில் வேலை பார்க்கும் மேனேஜர் மற்றும் ரூம்பாய்களிடம் விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் பாரத்ஜிரெட்டிக்காக ரூம் புக் செய்தவர்கள் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இன்டர்நெட் மூலம் பெண் பார்க்க அழைத்து நகையை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் அதிகம் நடந்து வருவதாகவும் அங்கு போலீஸார் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் மோசடி பேர்வழிகள் மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரிக்கு அழைத்து மோசடி செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ