கிருஷ்ணகிரி, “அ.தி.மு.க., கடந்த, 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த திட்டங்களை விட கூடுதலாக, 4 ஆண்டுகளிலேயே, தி.மு.க., செய்துள்ளது,” என, அமைச்சர் சக்கரபாணி பேசினார்.கிருஷ்ணகிரியில், 72வது கூட்டுறவு வார விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, 1,088 பேருக்கு, 10.36 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: கடந்த, 2011 முதல், 2021 வரையிலான, 10 ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்ட ரேஷன் கடைகளின் எண்ணிக்கை, 2,536. ஆனால், தி.மு.க., ஆட்சியில், 54 மாதங்களில் மட்டும் புதிதாக, 3,136 ரேஷன் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 210 புதிய, பகுதி நேர, முழு நேர ரேஷன் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., கடந்த காலத்தில் செய்த திட்டங்களை விட, அதிகமாக நான்காண்டில், தி.மு.க., செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், தி.மு.க., அரசின் காலை உணவு திட்டத்தை, கர்நாடகம் உள்ளிட்ட இதர மாநிலங்கள், அண்டை நாடான இலங்கை உள்ளிட்ட நாடுகளும் பின்பற்றுகின்றன. இதுதான், தி.மு.க., அரசின் சாதனை. இவ்வாறு, அவர் பேசினார்.கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் நடராஜன், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி ஆர்.சி., பாத்திமா மேல்நிலைப்பள்ளியில், 1,350 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல் மற்றும் கே.ஆர்.பி., அணையின் இடதுபுற கால்வாய் புனரமைப்பு பணிகளை, அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.