கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெல்லாரம்பள்ளியை சேர்ந்தவர் பாபு, 42. இவர் கடந்த டிச., 31ல் இரவு சாலை விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்தார். கடந்த, ஜன., 2ல் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, 6 பேர் பயனடைந்தனர். ஆனால் பாபுவின் குடும்பத்துக்கு யாரும் உதவவில்லை என்பதால், அவர் மனைவி செல்வி, 32, தன் 3 மகன்களுடன் கடந்த ஜன., 22ல் கலெக்டரிடம் மனு அளித்தார். அதில், தன் மூத்த மகன் சபரிநாதன், 11, 'அனோரெக்டல் ஒழுங்கின்மை' நோயால் பாதித்து, மலப்போக்கு கட்டுப்படுத்த முடியாத நிலையில், 'பேம்பர்ஸ்' வைத்து பள்ளிக்கு செல்வதாக தெரிவித்திருந்தார். இது குறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., உடல் உறுப்பு தானம் வழங்கிய பாபுவின் வீட்டிற்கு சென்று, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும், நோய் பாதித்த சிறுவன் சபரிநாதனுக்கு சென்னையில் சிகிச்சையளிக்க, அமைச்சர் மூலம் ஏற்பாடு செய்வதாகவும், பாபுவின் மனைவி செல்விக்கு விரைவில் அரசு வேலை வாங்கி தருவதாகவும் உறுதியளித்தார். சிறுவனின் மருத்துவ செலவிற்கு, 25,000 ரூபாய் நிதியுதவி அளித்தார்.கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன், நாகராஜ், சென்றாயன், சிவன், கலையரசன் உள்ளிட்ட, தி.மு.க.,வினர் உடனிருந்தனர்.