| ADDED : மார் 20, 2024 01:52 AM
ஓசூர்:ஓசூர் மலைக்கோவில், தேர் திருவிழா துவங்கியது.கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் மாதம் தேர்
திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழாவிற்கு
பூ கேட்கும் அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு, 7:00
மணிக்கு நடந்தது. தொடர்ந்து நேற்று காலை, 9:00 மணிக்கு,
திருக்கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா துவங்கியது. கோவில்
வாச்சீஸ்வர குருக்கள் கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து
தீபாராதனை காட்டினார். தொடர்ந்து, மரகதாம்பிகை உடனுறை
சந்திரசூடேஸ்வரர் உற்சவ மூர்த்தி, மலை மீது இருந்து, தேர்ப்பேட்டை
கல்யாண சூடேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.இரவு, 9:00
மணிக்கு சிம்ம வாகன உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
செய்தனர். விழாவில் இன்று (மார்ச் 20) இரவு, 9:00 மணிக்கு மயில் வாகன
உற்சவம் நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும், 24 இரவு,
9:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 25 காலை, 10:10 மணிக்கு
தேரோட்டம், 26 இரவு பல்லக்கு உற்சவம், 27 இரவு, 7:00 மணிக்கு தெப்பல்
உற்சவம் நடக்கிறது.