| ADDED : ஜன 27, 2024 04:36 AM
கிருஷ்ணகிரி: நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி வட்டாரம் கம்பம்பள்ளி கிராமத்தில், வேளாண் மற்றும் அட்மா திட்டத்தில், நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி, 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பேசிய, எலுமிச்சங்கிரி அறிவியல் மைய மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ், நெல்லில் பின்பற்ற வேண்டிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், மண் பரிசோதனை செய்தல் மற்றும் நீர் பரிசோதனை செய்தல் குறித்த முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வேளாண் துணை இயக்குனர் சீனிவாசன், அட்மா திட்டம் குறித்தும், செயல்பாடுகள் மற்றும் நெல்லில் பண்ணைப்பள்ளி பற்றியும், அதில் முதல் வகுப்பிலிருந்து, 6 வகுப்புகள் நடத்தும் முறைகள், அவற்றின் முக்கிய நோக்கம் குறித்தும், விவசாயிகளை, 5 குழுக்களாக பிரித்து அவர்களின் பணிகள் குறித்து விளக்கம் அளித்து, கோணோவீடர் பயன்படுத்தும் முறை மற்றும் பயன்களை விவசாயிகளுக்கு விளக்கினார். எலுமிச்சங்கிரி அறிவியல் மையம் மண்ணியல் தொழில்நுட்ப வல்லுனர் குணசேகர், வேளாண் அலுவலர் எலிசபெத்மேரி, உதவி வேளாண் அலுவலர் விஜயன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதில், 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.