| ADDED : நவ 27, 2025 01:52 AM
கிருஷ்ணகிரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜன் கூறுகையில், “வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் பணி செய்யும் தொழிலாளர்களின் பெயர்களை உடனே வருகை பதிவேட்டில் பெயரை சேர்க்க வேண்டும். 2022ல், 10 ஆண்டுகள் பணி முடிந்த தொழிலாளர்களுக்கு பச்சை அட்டையை, 2025ல் முடிய உள்ளதால், முன் தேதியுடன் வழங்க வேண்டும்.இக்கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த, 6 ஆண்டுகளாக கேட்டும், தமிழக அரசு மவுனம் சாதிக்கிறது. எனவே இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (நேற்று) முதல் சுமை துாக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.இதேபோல், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை மற்றும் தர்மபுரி மாவட்டம் கடத்துார் அடுத்த ஓசஹள்ளி ஊராட்சியிலுள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கிலும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.