| ADDED : ஜூலை 31, 2024 07:19 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் கீழ்வீதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த, 4 நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் குடிநீருக்கு அலைந்து வந்தனர். வேறு வழியின்றி மத்துார் பஞ்., நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் வழங்கப்படும் நீரை, 20 லிட்டர், 10 ரூபாய் என வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பஞ்.,களில், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், 5 ரூபாய்க்கு வழங்கப்படும் நிலையில், மத்துாரில் மட்டும், 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வேறு வழியின்றி மக்கள், 10 ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் முறையாக வழங்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.