ஓசூர் : தி.மு.க., தேரதல் அறிக்கை குழுவினர் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட பரிந்துரைகளை பெற ஓசூருக்கு நேற்று வருகை தந்தனர். இதில் பங்கேற்க பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், தி.மு.க.,வினரே வளைத்து, வளைத்து மனுக்களை வழங்கினர்.பாராளுமன்ற தேர்தலை ஒட்டி, தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தனர். ஓசூரில் ஒரு திருமண மண்டபத்தில் இதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறுந்தொழில் முனைவோர் என பல தரப்பினர், பார்லிமென்ட் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் இடம் பெற வேண்டிய முக்கிய கோரிக்கை குறித்த பரிந்துரைகளை வழங்கினர். கனிமொழி எம்.பி., தலைமையிலான அப்துல்லா எம்.பி., வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் கோவி.செழியன், சென்னை மேயர் பிரியா பெற்றுக் கொண்டனர்.தேன்கனிக்கோட்டை தாலுகா, மேலுாரை சேர்ந்த தொழிலாளி கங்கப்பா, 39; மேலுார் - தொளுவபெட்டா வரை, வனப்பகுதிக்கு நடுவே, 10 கி.மீ., துாரம் சாலை வசதி இல்லாததால், பல கிராம மக்கள், கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர் என, தவழ்ந்து வந்து மனு வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட கனிமொழி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்களான மதியழகன், பிரகாஷ், மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க., கவுன்சிலர்கள், இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் மனு கொடுத்தனர். தமிழக விவசாயிகள் சங்கம், ஓசூர் ஹோஸ்டியா சங்கம் உட்பட சில அமைப்புகள் தவிர, பெரிய அளவில் மக்கள் மற்றும் சங்கங்கள், தன்னார்வலர் பங்கேற்கவில்லை.