| ADDED : ஜன 27, 2024 03:48 PM
கிருஷ்ணகிரி:சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள ஹரியானா வாலிபருக்கு கிருஷ்ணகிரியில் வரவேற்பு அளித்தனர்.ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் நிரஜ்குமார், 27. இவர் இயற்கை வேளாண்மை மற்றும் சிறு தானியங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது நாகரீகம் எனும் பெயரில் சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்து வரும் நிலையில், இது குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு டிச., 1ல் காஷ்மீரில் இருந்து தன் சைக்கிள் பயணத்தை துவங்கி, ஒரு நாளைக்கு, 200 கி.மீ., தொலைவு பயணம் செய்து நேற்று கர்நாடகா மாநிலம் பெங்களூரு வழியாக கிருஷ்ணகிரிக்கு வருகை தந்தார். வழியில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள விவசாயிகளை சந்தித்து, சிறு தானியங்களின் நன்மைகள் குறித்தும், சிறு தானியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யவும், இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். கிருஷ்ணகிரி டோல்கேட்டில், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத் தலைவரும், பேராசிரியருமான சுந்தரர்ராஜ், விஞ்ஞானி குணசேகரன் ஆகியோர் நிரஜ்குமாரை வரவேற்று, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து புறப்பட்ட இவர் வரும், 31ல் தன் விழிப்புணர்வு பயணத்தை கன்னியாகுமரியில் நிறைவு செய்ய உள்ளார். மொத்தம், 4,200 கி.மீ., தொலைவிற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.