கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை, செந்துார் முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று காலை சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கிருஷ்ணகிரி தாலுகா பெரியமுத்துார் கிராமம் கருமலை கந்தவேலர் கோவிலில், சிறப்பு அபிஷேகம், தீந்தமிழ் வேள்வி, திருமுறை பாராயணம், மூலவர் திருக்குட நன்னீராட்டு, பேரொளி வழிபாடு நடந்தது. மாலை, சீர் கொண்டு வருதல், கிரிவலமும், இரவு, 8:00 மணிக்கு திருக்கல்யாணமும், விருந்தும் நடந்தன.ஓசூர் அருகே உள்ள அகரம் பாலமுருகன் கோவிலில், காங்., - எம்.பி., செல்லக்குமார் சுவாமி தரிசனம் செய்து, தேரை வடம் பிடித்து இழுத்தார். உடன் காங்., மாவட்ட துணைத்தலைவர் சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.சூளகிரியில், ராயக்கோட்டை சாலை உடையார் பாளையம் கிராமத்தில், பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். வேப்பனஹள்ளி அடுத்த கடவரப்பள்ளி காரக்குப்பம் கிராமத்திற்கு உட்பட்ட பச்சைமலை முருகன் கோவிலில் நேற்று முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு திரளான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வேப்பனஹள்ளி அடுத்த தீர்த்தம் பாலமுருகன் கோவில் மற்றும் எட்ரபள்ளி முருகன் கோவிலில், முருகனுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.* கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், 87ம் ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த, 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மயில், ரிஷபம், சேஷம், யானை வாகனங்களில் சுவாமி நகர் வலம் வந்தன. தைப்பூச நாளான நேற்று காலை, 4:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. காலை முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி துாக்கியும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழியில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் வாகனங்களிலும், பந்தல் அமைத்தும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோரை வழங்கினர்.இவ்விழாவிற்காக கிருஷ்ணகிரி நகரிலிருந்து கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு தலைமையில், 70க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழு மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர். நேற்று, 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவையொட்டி கோவிலை சுற்றிலும், 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. நாளை முதல் கோவில் அருகில் மாட்டுச்சந்தை நடக்க உள்ளது.