கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டியில், 32 அணிகள் கலந்து கொண்டன.கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட கால்பந்தாட்டக்குழு சார்பில், மாநில அளவிலான எழுவர் கால்பந்தாட்ட போட்டி கடந்த, 2 நாட்களாக நடந்தது. பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் போட்டியை துவக்கி வைத்தார். இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்தும், 32 கால்பந்து அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடந்த இப்போட்டிகள், நான்கு பிரிவுகளாக பிரித்து, அதில், 4 அணிகள் அரையிறுதியிலும், 2 அணிகள் இறுதி போட்டியிலும் மோதின.இதில் முதலிடம் பெற்ற அணிக்கு, 30,000 ரூபாய், 2ம் அணிக்கு, 25,000 ரூபாய், 3ம் அணிக்கு, 20,000 ரூபாய், 4ம் அணிக்கு, 15,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் சிறந்த ஆட்டக்காரர், கோல்கீப்பர், அம்பயர் ஆகியோருக்கு தலா, 1,000 ரூபாய் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கால்பந்தாட்டக்குழு மாவட்ட தலைவர் மதியழகன், செயலாளர் சரவணன், பொருளாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.