ஓசூர், ஓசூரில், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரி மீது, ஆலமரம் விழுந்து பலியான இருவரின் உறவினர்கள், இறந்தவரின் குடும்பத்தினருக்கு தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செப்டிக் டேங்க் லாரி டிரைவர் மாரப்பன், 45; கிளீனர் வெங்கடேஷ், 32; இருவரும் நேற்று முன்தினம் லாரியில் சென்றபோது, குசினிபாளையம் அருகே மத்திகிரி - இடையநல்லுார் சாலையில் இருந்த ஆலமரம், லாரி மீது சாய்ந்ததில் இருவரும் பலியாகினர்.பிரேத பரிசோதனை செய்து, இருவரது உடல்கள் வைத்திருந்த, ஓசூர் அரசு மருத்துவமனை முன், நேற்று காலை, இருவரின் குடும்பத்தாரும் திரண்டனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா, 10 லட்சம் ரூபாய், அரசு இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவமனை முன், தேன்கனிக்கோட்டை சாலையில், காலை, 9:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் அரசிடம் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.