| ADDED : ஜன 13, 2024 03:43 AM
கிருஷ்ணகிரி: மத்திய அரசு, 80 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கும் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மத்திய வேளாண் இணை செயலாளர் கேட்டுக்கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 333 பஞ்சாயத்துகளில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள, 'நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுறது. இதில், வேளாண் அறிவியல் மையம், நேரு யுவகேந்திரா, வங்கி திட்டங்கள், நபார்டு உள்ளிட்ட துறைகளின் சார்பில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்து கூறப்படுகிறது. அதன்படி, மத்துார் ஒன்றியத்தில் உள்ள நாகம்பட்டி பஞ்சாயத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய வேளாண் துறைக்கான இணை செயலாளர் ருக்மணி பேசுகையில், ''மத்திய அரசு கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில், 80 சதவீத மானியத்தில் ட்ரோன்களை வழங்க உள்ளது. தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு மானியத்துடன் சேர்த்து வங்கிக் கடன் மூலமாக ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளன. இதனால் வேளாண் இயந்திரம் மூலம் ஆட்கள் பற்றாக்குறையைப் போக்கி, குறைந்த செலவிலும், நேரத்தை சேமிப்பதுடன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.