கிருஷ்ணகிரி : முதலீட்டு பணத்திற்கு, 4 மடங்கு லாபம் கிடைக்கும் எனக்கூறி, பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்த ஆனந்தன், கணேசன் ஆகியோர் தலைமையில், 40க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:பர்கூரை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மூலம் கடந்த, 2019ல், சென்னையை சேர்ந்த தனுஷ் என்பவர் எங்களுக்கு அறிமுகம் ஆனார். அவர், 'கிரிப்ட்ஸ் மைன்' என்ற எம்.எல்.எம்., கம்பெனியில் முதலீடு செய்தால், 400 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறினார். இதை நம்பி கடந்த, 2019 மார்ச் முதல், முதலீடு செய்தோம். அதில் மாதந்தோறும் லாபத்தொகை கிடைத்தது. இதை நம்பி எங்கள் பகுதியில், 500க்கும் மேற்பட்டோர், 20 கோடி ரூபாய் அளவிற்கு பணம் கட்டினர். ஆனால் அவர்களுக்கு, கடந்த, 2020 மார்ச் முதல் எந்த பணமும் அனுப்பவில்லை.தனுசிடம் கேட்டபோது, அவர், பி.சி.எப்., கேசினோ, ஜென் கிளப், கிரிப்ட்ஸ் கோல்டு, ஜெர்ரியம் என, வெவ்வேறு கம்பெனி பெயர்களை கூறி, அதில் உங்கள் பணத்தை அப்படியே மாற்றி முதலீடு செய்யுங்கள். பணம், 4 மடங்காக திரும்ப கிடைக்கும் எனக்கூறி ஏமாற்றினார். முதலீட்டு தொகையை, 'கிரிப்ட்ஸ் கோல்டு' திட்டத்தில் சேர்ந்து, கிரிப்டோ காயின்களாக மாற்றினாலும், அதிக லாப தொகை கிடைக்கும் எனவும் கூறினார். ஆனால் எந்த பணமும் கிடைக்கவில்லை.நாங்கள் பணம் அனுப்பிய, 'கிரிப்ட்ஸ் மைன்' கம்பெனி இணையதளத்தில், எங்கள் முதலீட்டு தொகை டாலராக காட்டுகிறது. ஆனால், பணம் எடுக்க முடியவில்லை. எங்களை இத்திட்டங்களில் அறிமுகப்படுத்திய தனுஷ் என்பவரும், சரிவர பேச மறுக்கிறார். முதலீட்டை இழந்து தவிக்கும் எங்கள் புகார் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.