| ADDED : ஜூலை 25, 2024 04:45 AM
மதுரை: ''நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை போல மாயத் தோற்றத்தை முதல்வர் ஸ்டாலின் உருவாக்குகிறார்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.மதுரையில் அவர் கூறியதாவது: நிதி ஆயோக் வெளியிட்ட தகவலில் கடந்த அ.தி.மு.க., ஆட்சி யோடு தி.மு.க., ஆட்சி யை ஒப்பிட்டு பார்த்தால் தமிழகம் பின்நோக்கி தான் உள்ளது. குறிப்பாக 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணித பாடம் திறன் குறைவு எடுத்துக் கொண்டால் அ.தி.மு.க., ஆட்சியில் 67 சதவீதம் இருந்தது. தற்போது 71.3 சதவீதமாக உயர்ந்துவிட்டது. உயர் கல்வி சேர்க்கையில் 2021 ஆண்டின் முடிவில் 51 சதவீதமாக உயர்ந்து இருந்தது. தற்போது 47 சதவீதமாக குறைந்துவிட்டது.தொழில் துறையில் புதிய கண்டுபிடிப்பு திறன் 37.95 சதவீதமாக இருந்தது இன்று 15.69 சதவீதமாக குறைந்து விட்டது. முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் அறிக்கையில் தேசிய சராசரியை ஒப்பிட்டு அதில் தமிழகம் தேசிய சராசரி காட்டிலும் அதிக மதிப்பீடு பெற்றதாக விளம்பரப்படுத்தி வருகிறார். உண்மை என்னவென்றால் தேசிய சராசரியை காட்டிலும் மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை காட்டிலும் மதிப்பீட்டை அதிகமாக பெற்று முதலிடத்தில் உள்ளதை மறைத்து விட்டார்.தரமான கல்வியில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. துாய்மையான குடிநீர் வழங்குவதில் 9வது இடத்திலும் உள்ளது. சுகாதாரம் மற்றும் மக்கள் நலனில் 7வது இடம், அமைதி காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள் அமைப்பதில் 14வது இடம், உற்பத்தி மற்றும் நுகர்வில் 10வது இடம், பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலை வாய்ப்பில் தமிழகம் 4 வது இடத்தில் உள்ளது. தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்ட வசதியில் 4வது இடம், சமத்துவமின்மையை குறைத்தலில் 5வது இடத்தில் உள்ளது. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த தி.மு.க., அரசு தற்போது நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார் ஸ்டாலின். இவ்வாறு கூறினார்.