| ADDED : ஜூலை 11, 2024 05:31 AM
மதுரை: பத்தாண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மதுரை - துாத்துக்குடி தொழில்வழித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்.மதுரையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான இடஒதுக்கீடு 4.47 சதவீத அளவே உள்ளது. ஏற்கனவே தொழிற்சாலை வகைப்பாட்டில் இருந்த நிலங்கள் மறுசீரமைப்பு முறையில் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால் தொழிற்சாலை நிலங்களுக்கான சதவீதம் குறைந்து வருகிறது. எனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 10 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த மதுரை - துாத்துக்குடி தொழில்வழித் திட்டத்தை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என மதுரை தொழில், வணிகர்கள் சங்க பிரதிநிதிகளிடையே கோரிக்கை வலுத்து வருகிறது.இதுகுறித்து மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் கூறியதாவது: 1999 - 2000 ம் ஆண்டு மத்திய ரயில்வே பட்ஜெட்டில் மதுரை - துாத்துக்குடி இடையிலான அகல இருவழி ரயில் பாதைத் திட்டம் முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் உருவாக்கப்பட்டது. இது ஏற்றுமதித் துறைக்கு சிறந்த திட்டமாக அமைந்தது. ஆரம்ப நிலையாக துாத்துக்குடி - மீளவட்டான் மேல்மருதுார் வரை 18 கி.மீ நீளத்திற்கு ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. போதிய நிதி இல்லை என பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டது.அடுத்ததாக 2013 - 2014 ல் மதுரை - துாத்துக்குடி தொழில்வழித் தடத்தை அரசாணையாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருந்தால் மதுரை - துாத்துக்குடி வரை 160 கி.மீ.,க்கு இடையிலான 10 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் வளர்ச்சித் திட்டமாக அமைந்திருக்கும். கோடிக்கணக்கில் வெளிநாட்டு முதலீட்டுகளை ஈர்த்திருக்கலாம். உள்நாட்டிலும் அதிக சிறுதொழில் யூனிட்கள் உருவாகி ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கும்.இந்த திட்டத்தினால் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ், உணவுப் பதப்படுத்துதல், ரசாயனம், மருந்து பொருட்கள் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதோடு பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்திருக்கும்.இந்த திட்டம் தற்போது வரை கிடப்பில்தான் உள்ளது. இத்திட்டத்திற்கு உயிரூட்ட இவ்வழித்தடத்தில் பெருநிறுவனங்களுக்கான அரசின் சிப்காட், சிறு நிறுவனங்களுக்கான 'சிட்கோ' தொழிற்பேட்டைகளை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.