| ADDED : ஆக 13, 2024 06:15 AM
சோழவந்தான்: சோழவந்தான் தொகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்த ஊராட்சிக்கு தலா ரூ.35 ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்யும் ஒன்றிய அலுவலர்களால் ஊராட்சி தலைவர்கள் புலம்பி வருகின்றனர். இத்தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி ஒன்றியத்தில் 23ம், அலங்காநல்லுாரில் 37ம், மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சில ஊராட்சிகளும் உள்ளன. ஜூலையில் இருந்து மக்களுடன் முதல்வர் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில்5 முதல் 6, 8 ஊராட்சிகளை ஒன்றிணைத்து கிராம மக்களிடம் 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மனுக்கள் வாங்குகின்றனர். முகாமிற்கான பந்தல்,இணையதள வசதி, டீ, ஸ்நாக்ஸ், அலுவலர்களுக்கு சைவ, அசைவ மதிய உணவு என ஊராட்சிக்கு தலா ரூ.35 ஆயிரம் வசூலிக்கின்றனர். கூட்டத்தை காட்ட கிராமங்களில் இருந்து ஆட்களை ஆட்டோவில் அழைத்து வரும் செலவு தனி என புலம்புகின்றனர்.ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது: முகாமிற்கு என அரசு தொகை நிதி ஒதுக்குகிறதா என தெரியவில்லை. செலவு தொகையை விட கூடுதலாக வாங்குகின்றனர். ரூ.20 ஆயிரம் வழங்கினால், முகாம் முடிந்தாலும் மீதம் ரூ.15 ஆயிரத்தை ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் தொடர்ந்து கேட்கின்றனர். ஊராட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதி, சம்பளபணமே ஊராட்சி கணக்கில் வரவில்லை. இந்நிலையில் சொந்த பணத்தை தந்துள்ளோம் என்றனர்.