| ADDED : ஏப் 23, 2024 06:55 AM
மதுரை : சித்திரைத்திருவிழாவின் 11ம் நாளான நேற்று மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன் கோயில் தேர்கள், மக்கள் வெள்ளத்தில் மதுரை அதிர ஆடி ஆசைந்து வந்தன. ஆறரை மணி நேரத்திற்கு பிறகு அடுத்தடுத்து நிலைக்கு வந்தன.மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.,12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதைதொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. கோயிலில் உள்ள முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளினர். சிறப்பு தீபாராதனைக்கு பிறகு தேர்களில் எழுந்தருளினர்.தேர்களை காக்கும் தேரடி கருப்பண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தேர்கள் குலுங்கி குலுங்கி வரும்போது அம்மன், சுவாமி ஆபரணங்கள் சேதமுறும் என்பதால் தேரோட்டத்தின்போது அம்மன், சுவாமிக்கு ஆபரணங்கள் அணிவிப்பதில்லை.சுந்தரேஸ்வரர் பிரியாவிடை இருந்த பெரிய தேர் காலை 6:30 மணிக்கு புறப்பட்டது. அடுத்து 6:45 மணிக்கு மணிக்கு அம்மன் தேர் புறப்பட்டது. இசைக்கருவிகள் அதிர, சங்குகள் முழங்க, மதுரையே குலுங்கும் வகையில் மாசி வீதியில் 'மாஸ்' ஆக பிரம்மாண்ட தேர்கள் வலம் வந்ததை பார்த்து பக்தர்கள் 'ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா...' என கோஷமிட்டு பரவசமடைந்தனர். 4 மாசி வீதிகளையும் சுற்றி வந்த பெரிய தேர் மதியம் 12:44 மணிக்கும், அம்மன் தேர் 1:04 மணிக்கும் நிலைக்கு வந்தன.