| ADDED : ஜூன் 03, 2024 03:31 AM
திருப்பரங்குன்றம்: ''தி.மு.க., ஆட்சியை மக்கள் நம்பத் தயாராக இல்லை,'' என, திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டினார்.மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசியதாவது: தி.மு.க., அரசு நீடித்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது. சமீபத்தில் வெளியானது கருத்துக் கணிப்பு இல்லை. கருத்து திணிப்பாகத்தான் உள்ளது. இக்கருத்து திணிப்பு பல நேரங்களில் பொய்யாகியுள்ளது. அதற்கு பல உதாரணங்களையும் கூறலாம்.மூன்று ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை, கட்டுமான பொருள்களின் உயர்வு என மக்களுக்கு சுமையை உயர்த்திய தி.மு.க., ஆட்சியை மக்கள் ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை என்றார்.