உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அலைபேசியால் குழந்தைகளுக்கு உடல், உளவியல் சார்ந்த நோய்கள்

அலைபேசியால் குழந்தைகளுக்கு உடல், உளவியல் சார்ந்த நோய்கள்

மதுரை : அதிக நேரம் அலைபேசி உபயோகிப்பதால் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை தொலைத்துவிடுகின்றனர். அலைபேசியால் உடல், உளவியல் சார்ந்த நோய்களுக்கு ஆளாகின்றனர்' என உளவியல் புகைப்பட பயிற்சியாளர் வெங்கடசுப்பிரமணியன் எச்சரித்தார்.மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் 'அலைபேசி - அறிய வேண்டிய தகவல்கள்' என்னும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நுாலகர் சந்தான கிருஷ்ணன் வரவேற்றார். வெங்கடசுப்பிரமணியன் பேசியதாவது:இக்காலங்களில் குழந்தைகள் மணிக்கணக்கில் அலைபேசியில் மூழ்கிவிடுகின்றனர். அதனால் உடல் சார்ந்த, உளவியல் சார்ந்த பிரச்னைகள் உருவாகின்றன. வன்முறை நிறைந்த விளையாட்டுகளை அலைபேசியில் விளையாடுவதால் இரவில் பயங்கர கனவுகள் ஏற்பட்டு துாங்க முடியாமல் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். வீட்டிற்கு வெளியில் விளையாட வேண்டிய விளையாட்டுளை அலைபேசியில் விளையாடுகின்றனர்.குழந்தைகள் போதியளவு தண்ணீர் குடிக்காமல், சாப்பிடாமல், துாங்காமல், உடல் அசைவு இல்லாமல் அதிகநேரம் அலைபேசி உபயோகிப்பது பல வியாதிகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகளின் கையெழுத்தில் கூட மாற்றம் ஏற்படும். எனவே ஒருநாளைக்கு அரைமணி நேரத்திற்கு மேல் அலைபேசி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். புத்தகம் வாசிப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் துாங்கினால்தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அலைபேசி உபயோகிப்பால் இன்று பல குழந்தைகள் முதிர்ச்சியுடன் பேசுகின்றனர். பெற்றோரும் அதை நினைத்து பெருமைப்படுகின்றனர். எந்தெந்த வயதில் என்ன தெரிய வேண்டுமோ அதை தெரிந்து கொண்டால் போதும். குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தை தொலைத்துவிடக் கூடாது. பெற்றோர் தங்கள் வேலை காரணமாக குழந்தைகளிடம் நேரம் செலவழிப்பது இல்லை. அது அவர்களை அலைபேசி பக்கம் இழுத்துச் செல்கிறது. அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள் என்றார். நுாலகர் அங்கமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை