| ADDED : மே 27, 2024 06:32 AM
மதுரை : மதுரையில் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய இணைப்புகள் தோறும் 'கழிவுகள் வடிகட்டும்' தொட்டிகள் (டயாபிராம்) அமைக்கலாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் உள்ள பாதாளச் சாக்கடை அமைப்புகளில் வீடுகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் என தற்போது 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளன. பாதாள சாக்கடை உடைப்பு பிரச்னை மாநகராட்சிக்கு பெரும் சவாலாக இருந்தபோது கமிஷனர் தினேஷ்குமார் முயற்சியால் கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்களை கொண்டு சரிசெய்யப்பட்டு வருகின்றன. ஆனால் மக்கள் அன்றாட வாழ்க்கை முறையில் விழிப்புணர்வு இல்லாததால் கழிவு நீரை வெளியேற்றும் போது பிளாஸ்டிக் கவர்கள், ஷாம்பு பாக்கெட்டுகள், முடி குவியல்கள், மண் போன்ற அடைப்புகளை ஏற்படுத்தும் பொருட்களையும் குழாய் வழியே பாதாள சாக்கடைக்கு செல்லும் குழாய்களில் வெளியேற்றுகின்றனர்.இதனால் அடைப்புகள் ஏற்பட்டு ரோடுகள், தெருக்கள் என வித்தியாசம் இன்றி பாதாளச் சாக்கடைகள் கழிவுகள் பொங்கி சுகாதாரக் கேடு, போக்குவரத்து பிரச்னையை ஏற்படுத்துகின்றன. இதற்கு தீர்வாக தான் இந்த மினி கழிவுநீர் தொட்டிகளை மக்கள் அமைக்க வேண்டும் என்ற பிரசாரத்தை மாநகராட்சி தீவிரமாக துவங்கியுள்ளது.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏற்கனவே உள்ள பிரச்னையான பகுதிகளில் பாதாளச் சாக்கடை இணைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. 80 சதவீதம் குடியிருப்புகள், வணிக வளாகங்களில் இந்த கழிவு நீர் தொட்டிகள் வசதி இல்லை. அடுக்கு மாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு இணைப்புக்கும் இந்த தொட்டி வசதி ஏற்படுத்த திட்டமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.மேலும் தற்போது ரூ.460 கோடியில் விடுபட்ட மற்றும் புதிய பகுதிகளில் புதிதாக பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளும் விரைவில் துவங்கவுள்ளன. இவற்றில் 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் புதிதாக வழங்கப்படவுள்ளன. ஆனால் பழைய இணைப்புகளின் வீடுகள், வணிக வளாகங்கள், நிறுவனங்களில் பெரும்பாலும் கழிவு நீர், கழிவுகளுடன் இணைப்புகள் வழியாக நேரடியாக பாதாளச் சாக்கடைக்கே விடுக்கப்படுகின்றன. இதனால் தான் அடைப்புகள் பிரச்னை தீர்ந்தபாடில்லை.இதற்காக மாநகராட்சியில் மினி கழிவுநீர் தொட்டி அமைக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் கழிவுநீரின் கழிவுகள் தனியாக வடிகட்டப்படுகின்றன. வீடுகளில் குப்பைகளை சேகரிக்க வரும் துாய்மை பணியாளர்களிடம் இவ்வகை கழிவு குப்பைகளை வழங்கலாம். இதன் மூலம் பெரும்பாலான அடைப்புகள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வசதி மேற்கொள்ளவதை கட்டாயமாக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.