| ADDED : ஜூலை 17, 2024 12:48 AM
திருமங்கலம், : கப்பலுாரில் விதிமுறை மீறி டோல்கேட் அமைக்க்ப்பட்டுள்ளதால், அப்பகுதி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடக்கிறது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் வரை பழைய நடைமுறையே தொடர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஒரே நாளில் மீண்டும் உள்ளூர் வாகனங்களிடம் கட்டணம் கேட்டு டோல்கேட் ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டனர்.நேற்று மதியம் கப்பலுார் சிட்கோவில் இருந்து கழிவுகளை ஏற்றிக் கொண்டு, திருமங்கலம் குதிரைசாரிகுளம் நோக்கி சென்ற மினிவேன் திரும்பி வந்தது. டோல்கேட்டில் மினிவேன் டிரைவர் நாகராஜனிடம் கட்டணம் செலுத்தும்படி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.அதற்கு அவர் மினிவேன் கப்பலுார் 'சிட்கோ'வில் தினசரி வாடகைக்கு ஓடுகிறது. உள்ளூர் வாகனம் என்பதால் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை. நேற்றுதான் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தான் சென்ற சிட்கோ டோல்கேட் அருகே ஒரு கி.மீ., ல் உள்ளது என்றார். இருப்பினும் டோல்கேட் ஊழியர்கள் வேனுக்கு அனுமதி மறுத்து தகராறு செய்துள்ளனர்.இதையடுத்து டிரைவர் நாகராஜ் டோல்கேட் எதிர்ப்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள், டோல்கேட் ஊழியர்களிடம், கலெக்டர் அலுவலகத்தில் முடிவெடுத்த பின், எப்படி கட்டணம் கேட்கலாம் என்றனர். இதற்கிடையே நாகராஜ் தனது வாகனத்தை 1வது டோல்கேட்டில் நிறுத்தி வெளியேறினார். இதனையடுத்து டோல்கேட் ஊழியர்கள் வாகனத்தை விடுவதாக கூறவே அங்கிருந்து டிரைவர் நாகராஜ் வேனை எடுத்து சென்றார். இதனால் முதலாவது டோல் கேட்டில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.