| ADDED : ஏப் 27, 2024 04:56 AM
மதுரை, ஏப். 27 - மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக தமுக்கத்தில் நடக்கும் சித்திரை பொருட்காட்சி லோக்சபா தேர்தலை காரணம் காட்டி இதுவரை துவங்காததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 45 நாட்கள் இப்பொருட்காட்சி நடத்துவது வழக்கம். தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது. இதேநிலை 2019 லோக்சபா தேர்தலிலும் இருந்தது. ஆனால் அப்போது இருந்த கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்கூட்டியே தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று ஏப்.,10ல் பொருட்காட்சியை துவக்கினர். நன்னடத்தை விதியால் அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை.ஆனால் இந்தாண்டு மாநகராட்சி அனுமதி அளித்தும் செய்தித்துறை அதிகாரிகளின் சுணக்கத்தால் தேர்தல் கமிஷனின் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் அரசு பொருட்காட்சி நடத்துவது கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மே 10க்கு மேல் துவக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமானம் போச்சு
மக்கள் கூறியதாவது: பத்து நாட்கள் மீனாட்சி தொடர்பான விழாவும், 5 நாட்கள் அழகர் வருகை தொடர்பான விழாக்களில் தான் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக திருவிழாவின்முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் எதிர்சேவை, வைகையாற்றில் அழகர் எழுந்தருளல், பூப்பல்லக்கு போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக நகருக்குள் வந்தனர். தரிசனம் முடிந்தவுடன் வழக்கம் போல் பொருட்காட்சிக்கு செல்ல முடிவு எடுத்தபோது ஏமாற்றம் அடைந்தனர். நேற்று அழகர் இருப்பிடம் புறப்பட்டதால் மொத்த திருவிழா கூட்டமும் அவரோடு புறப்பட்டுவிட்டது.பொருட்காட்சி 45 நாட்கள் நடந்தாலும் இந்த முக்கிய நிகழ்வுகளில் தான் வருவாய் கொழிக்கும். ஆனால் இந்தாண்டு வருவாய் இழப்பும் ஏற்படும். 2019ம் ஆண்டு போல் அதிகாரிகள் முன்கூட்டியே இதுதொடர்பாக நடவடிக்கையில் இறங்கியிருந்தால் இந்நேரம் பொருட்காட்சியும் ஜோராக நடந்திருக்கும். அரசுக்கும் வருவாய் கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை நழுவ விட்ட அதிகாரிகள், பெயருக்கு பொருட்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றனர்.