| ADDED : மே 26, 2024 11:05 PM
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆஸ்டின்பட்டியில் பீஹார் தொழிலாளியை கொலை செய்து அலைபேசியை பறித்துச் சென்ற சம்பவத்தில் ஆறு மாதங்களுக்கு பின் மூவர் கைது செய்யப்பட்டனர்.ஆஸ்டின்பட்டியில் காசநோய் மருத்துவமனைக்கு புதிய கட்டடப் பணிகள் நடக்கிறது. இப் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பீஹார் மாநிலம் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஸ்குமார் பஸ்வான் 20, சன்னெய்குமார் 19, வேலை செய்து வந்தனர்.கடந்தாண்டு நவ. 28 இரவில் கூத்தியார் குண்டு பகுதியில் காய்கறிகள் வாங்கியவர்கள், தங்கி இருந்த மூனாண்டிபட்டி கிராமத்திற்கு நடந்து சென்றனர். ஒரே டூவீலரில் வந்த மூன்று பேர் அவர்களை வழிமறித்து நேரம் கேட்டுள்ளனர். சுபாஷ் குமார் பஸ்வான் தான் வைத்திருந்த அலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்து சொன்னார். டூவீலரில் வந்தவர்கள் அவரது அலைபேசியை பறித்து தப்ப முயன்றனர்.அவர்களிடமிருந்து அலைபேசியை மீண்டும் பறிக்க இரு தொழிலாளிகளும் போராடி உள்ளனர். அந்த நபர்கள் கத்தியால் சுபாஷ் குமார் பஸ்வானை குத்தினர். தடுக்க வந்த சன்னெய்குமாரையும் தாக்கி தப்பினர். இதில் சுபாஷ் குமார் பஸ்வான் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த சன்னெய்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர்.இருள் சூழ்ந்த பகுதியில் சம்பவம் நடந்ததாலும், அந்தப் பகுதியில் 'சிசிடிவி' கேமராக்கள் இல்லாததாலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது. டி.எஸ்.பி.,அருள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய காண்டீபன், லட்சுமி லதா, எஸ்.ஐ., மாரி கண்ணன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில் போலீசார் தனக்கன்குளம் பகுதியில் நடத்திய வாகன சோதனையின் போது டூவீலரில் வந்த திருமங்கலம் மம்சா புரத்தை சேர்ந்த சங்கையா 20, சந்தோஷ் 20, இருவரிடமும் விசாரித்தனர். அவர்களுக்கு பீஹார் தொழிலாளி கொலை சம்பவத்தில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவல்படி ஆந்திராவில் பதுங்கி இருந்த திருமங்கலம் அழகுசிறையைச் சேர்ந்த வல்லரசு 22, என்பவரை கைது செய்தனர். மேல்விசாரணை நடக்கிறது.