உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிபந்தனை இல்லாத மாறுதல் கலந்தாய்வு * தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்

நிபந்தனை இல்லாத மாறுதல் கலந்தாய்வு * தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை:'கல்வித்துறையில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை இந்தாண்டும் நிபந்தனையின்றி நடத்த வேண்டும்' என தலைமையாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இந்தாண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் 'தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பு காரணமாக கடந்தாண்டு இந்த நிபந்தனை நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன் கூறியதாவது:2023ல் நடந்த கலந்தாய்வில் கல்வித்துறை கமிஷனர், தொடக்க கல்வி இயக்குநர் செயல்முறையில் 'கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளிகளில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை கடைப்பிடிக்க தேவையில்லை' என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு மீண்டும் அந்த நிபந்தனை இடம் பெற்றுள்ளது.இதனால் பதவி உயர்வில் சென்ற மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப முடியாமல் பாதிக்கப்படுவர். கடந்தாண்டு மே மாதம் நடத்த வேண்டிய கலந்தாய்வு ஆகஸ்டில் நடத்தப்பட்டதால் யாருமே ஓராண்டை நிறைவு செய்திருக்க முடியாது. இதனால் பெரும்பாலானோர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும். எனவே இந்தாண்டும் 'ஓராண்டு நிபந்தனையை' ரத்து செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை