| ADDED : ஜூலை 31, 2024 01:05 AM
மதுரை:'மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உத்தப்புரம் கோவிலில் மக்கள் வழிபட உரிமை உண்டு. பூட்டி வைத்திருக்கக்கூடாது. ஏற்கனவே சமாதான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதை பின்பற்ற வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.உத்தப்புரம் பாண்டி தாக்கல் செய்த மனு:உத்தப்புரத்தில் முத்தாலம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமானது. 2008ல் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. வேறொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோவிலை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். வழிபாட்டு உரிமை கோரினர். இரு சமுதாயத்தினரிடையே எஸ்.பி., தலைமையில் சமாதான பேச்சு நடந்தது. வேறொரு சமுதாயத்தினரை வழிபட அனுமதிப்பதில் ஆட்சேபனை இல்லை; கோவில் பராமரிப்பு, நிர்வாகம் எப்போதும்போல் ஒரு சமுதாயத்திடம் இருக்கும். இருதரப்பிலும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறுவது என உடன்பாடு ஏற்பட்டது. திருவிழா 2012 முதல் 2014 வரை நடந்தது.சமாதான உடன்பாட்டை 2015ல் திருவிழாவின்போது சிலர் மீற முயன்றனர். இதனால் அரசு தரப்பில் திருவிழா நிறுத்தப்பட்டது. கோவில் வளாகம் பூட்டப்பட்டது. பின், 9 ஆண்டுகளாக கோவிலை திறக்க அரசு தரப்பில் எங்களை அனுமதிக்கவில்லை. கோவிலில் தினசரி பூஜை நடைபெறவில்லை.கோவிலை திறந்து பூஜை, திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க கலெக்டர், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., பேரையூர் தாசில்தார், எழுமலை போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.அரசு தரப்பு: கோவிலை நாங்கள் பூட்டவில்லை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தான் பூட்டினர். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: கோவில் கிராம மக்களுக்கு சொந்தமானது. மனுதாரர் மற்றும் கிராம மக்கள் வழிபட உரிமை உண்டு. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் போலீசார் வழக்கு பதியலாம். கோவிலை பூட்டி வைத்திருக்கக்கூடாது. ஏற்கனவே இருதரப்பிலும் சமாதான உடன்பாடு ஏற்பட்டதன் அடிப்படையில் இது தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. அச்சமாதான உடன்படிக்கையை தற்போது பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.