மதுரை: மதுரை மாநகராட்சியில் அலுவலர்களுக்கான பதவி உயர்வு, டிரான்ஸ்பர் நடவடிக்கைகள் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன் துவங்கவுள்ள நிலையில், 28 விரிவாக்கப் பகுதி வார்டுகளில் பணியாற்ற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.மாநகராட்சி மெயின் அலுவலகம், 5 மண்டல அலுவலகங்கள், வார்டு ஆபீஸ்களில் நிர்வாகம், பொறியியல், சுகாதாரம் என மூன்று பிரிவுகளில் உதவி கமிஷனர், உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பில் கலெக்டர்கள், ஸ்கில்டு 2 பணியாளர்கள், மேஸ்திரி, எழுத்தர்கள் என பலர் பணியில் உள்ளனர்.இவர்களில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியோர், விருப்ப கடிதம் அளித்தோர், புகார்களுக்கு ஆளானோர் போன்ற காரணங்களால் டிரான்ஸ்பர் மேற்கொள்ள பட்டியல் தயாராக இருந்தும் லோக்சபா தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நாளை (ஜூன் 4) ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்பு, பெரிய அளவில் டிரான்ஸ்பர் இருக்கும் என அலுவலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.அவர்கள் கூறியதாவது: உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி வருவாய் அலுவலர், கண்காணிப்பாளர், பில் கலெக்டர்கள் ஆகியோரது 'டிரான்ஸ்பர்' தான் முக்கியத்துவம் பெறும். குறிப்பாக விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளில் பணியாற்ற அவர்களுக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 78 வார்டுகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை பிரச்னைகள், வரிவசூல் இலக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளதால் பணிகள் கடும் சவாலாக இருக்கும்.ஆனால் விரிவாக்க பகுதியின் 28 வார்டுகளிலும் சாக்கடை பிரச்னை இல்லை. புதிய ரோடு பணிகள் உட்பட ரூ.பல கோடிகளில் 'பசை'யுள்ள பணிகள் நடப்பதால் அந்த வார்டுகளுக்கு செல்ல போட்டி நிலவுகிறது. எனவே பழைய 78 வார்டுகளில் இதுவரை பணியாற்றியவர்களை அந்த 28 வார்டுகளில் நியமிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். 'அரசியல்' பின்னணியில் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளையும் மாற்ற கமிஷனர் தினேஷ்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.