| ADDED : டிச 08, 2025 06:15 AM
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் மதுரை, எழுமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 300 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாமல் முருக பக்தர்களை அவமதித்ததாக, தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில செயலாளர் சேவகன், மாவட்ட தலைவர் அழகர்சாமி, நிர்வாகி வெங்கடேசன், கோட்டச் செயலாளர் அரசுபாண்டி, ஹிந்து வழக்கறிஞர் முன்னணி மாநில துணைத் தலைவர் பரமசிவம், ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் மாநில பொருளாளர் ஆதிசேஷன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினர். அவர்கள் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர். 35 பேர் கைது எழுமலை: திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததை கண்டித்து அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்த ஹிந்து முன்னணி சேடப்பட்டி ஒன்றிய தலைவர் லட்சுமணன் தலைமையில் 24 பேரையும், போலீசார் குடியிருப்பு அருகில் பா.ஜ., நிர்வாகி மாத்துாரான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 11 பேரையும் போலீசார் கைது செய்தனர்.