உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் கம்பராமாயணம் உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

 அடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் கம்பராமாயணம் உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

மதுரை: அடுத்த தலைமுறை யினர் வாழ்வின் புரிதலுக்கு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் கம்பராமாயணம் என மதுரையில் நடந்த கம்பன் கழக ஆண்டு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் கம்பன் கழக ஆண்டு விழாவின் முதல் நாள் நிகழ்வு ஆண்டாள்புரத்தில் நடந்தது. பேராசிரியர் பத்மலட்சுமி அனைவரையும் வரவேற்றார். 'கம்பனில் பல்சுவை' நூலை தியாகராஜர் கல்லூரி செயலர் ஹரி தியாகராஜன் வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: இந்தியாவின் உயிர் மூச்சு மதச்சார்பின்மை. உலக நாடுகளில் இந்திய அரசியலமைப்பு தனித்து விளங்க மதச்சார்பின்மை தான் காரணம். கம்பராமாயணத்தில் ராமனை 'இறைவன்' என்று குறிப்பிடாமல் 'தலைவன்' என்றே கம்பர் குறிப்பிட்டுள்ளார். அங்கிருந்து தான் அரசியலமைப்பிற்கான மதச்சார்பின்மை பிறந்தது என்று நினைக்கிறேன். இந்த தலைமுறைக்கு உணர்வு தேவையில்லை; உபயோகம் தேவை. பணிவு தேவையில்லை; பயம் தேவை. ஆட்சியாளர்களை துதி பாடும் கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை நெறிப்படுத்த கம்பராமாயணம் அவசியம். வழிகாட்டிய ராமன் அடுத்த தலைமுறையினர் வாழ்வின் புரிதலுக்கு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் கம்பராமாயணம். தமிழரை அறவழியில் நெறிப்படுத்தவே கம்பர் ராமாயணத்தை கையில் எடுத்தார். 'ராமன் எனும் கடவுளின் தோள் மீது நாம் ஏறிக்கொண்டால் நம் துயரங்கள் தொலைந்து போகும்'. நம் சமூகத்தில் பலபேர் தவறு செய்யாமல் இருப்பதற்கு சமூக அச்சம் தான் காரணம். ஆனால் தவறு செய்யும் சூழ்நிலை இருந்தும் தவறு செய்ய விடாத தார்மீக அச்சம் தான் மனிதனுக்கு அவசியம் என கம்பராமாயணம் வலியுறுத்துகிறது. தார்மீக அச்சத்தை நிலை நிறுத்தும் போது தான் மானிட நிலையின் உச்சத்தை அடைய முடியும். கம்பராமாயணத்தில் வெற்றியின் களிப்பில் தன்னை மறந்த சுக்ரீவனை அதிகாரத்தில் இருப்பவர்களைப் பொருத்திப் பார்க்கலாம். என்னுடைய தீர்ப்புகளுக்கு வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள ராமன் எனக்கு ஒளியாகத் வழிகாட்டினார். இவ்வாறு பேசினார். பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, மதுரை கம்பன் கழகத் தலைவர் சங்கர சீத்தாராமன், 'பபாசி' நிர்வாகி சேது சொக்கலிங்கம், ஜவஹர் அசோசியேட்ஸ் சுரேஷ், தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலை, பேராசிரியர் ராமமூர்த்தி, செயலாளர் புருஷோத்தமன், இணைச் செயலாளர்கள் ரேவதி சுப்புலட்சுமி, கண்ணன், கோவில்பட்டி கம்பன் கழக செயலாளர் சரவணச்செல்வன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ