| ADDED : ஜன 29, 2024 05:57 AM
திருநகர்: திருநகர் - பாலசுப்பிரமணியன் நகர் இணைப்பு தரைப்பாலம் மீண்டும் மீண்டும் சேதமடைந்து வருவதால், நிரந்தர தீர்வுக்கு வழி காண வேண்டும்.திருநகர் ஏழாவது பஸ் ஸ்டாப்பில் இருந்து பாலசுப்பிரமணியன் நகருக்கு செல்லும் வழியில், திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாயின் மேல் தரைப்பாலம் உள்ளது. பாலசுப்பிரமணியன்நகர் பகுதி வேகமாக விரிவடைந்து வருகிறது. ஏராளமான வீடுகள் கட்டப்படுவதால், கட்டுமான பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகள், பல பள்ளி வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாகவே சென்று திரும்புகின்றன.அந்த பாலத்தின் ஒருபகுதியில் சேதமடைந்து பெரிய ஓட்டை விழுந்தது. இதுகுறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. இதையடுத்து ஓட்டையை சிமென்ட் மூலம் மூடினர். அதுவும் சேதம் அடைந்ததால் அதே இடத்தில் பழைய சிமென்ட் சிலாப் வைக்கப்பட்டது. தற்போது அதுவும் சேதம் அடைந்து வருகிறது.தரையை விட அரை அடி உயரமாக உள்ளதால், இரவு நேரங்களில் டூவீலர்களில்செல்வோர் சிலாப்பில் மோதி விழுந்து காயம் அடைகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த தரைப்பாலம் பலத்த சேதம் அடைந்துள்ளது. முழுமையாக சேதம் அடைந்தால் வாகனங்கள் கால்வாய்க்குள் விழுவது நிச்சயம். அந்நிலை ஏற்பட்டால் 2 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டும்.எனவே பாலம் முழுமையாக சேதமடைந்து விபரீதம் நிகழும் முன் நிரந்தர தீர்வுக்கு வழிகாண வேண்டும். அதுவரை அந்த தரைப்பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து, ஹார்விபட்டி எதிரே உள்ள தேவிநகர் ரோட்டின் வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும்.