| ADDED : மார் 15, 2024 07:15 AM
மதுரை: குறுகலான தெருக்கள், நாய்கள் தொல்லை, மழைநீர் வாய்க்காலில் தேங்கும் குப்பை, புதிய மின் இணைப்பு பெறமுடியாத நிலை, வீடுகளுக்கு 30 ஆண்டுகளாக கிரையப்பத்திரம் பெறமுடியாத சூழல் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் மதுரை மாநகராட்சி 82 வார்டு சோலையழகுபுரம் மக்கள்.சோலையழகுபுரம் 1-3 தெருக்கள், வாஞ்சிநாதன்வீதி, விசாலாபாகம் 1-3 தெருக்கள், சித்திவிநாயகர்கோயில் தெரு, முனியாண்டி கோவில் தெரு, உள்பட 60 குறுக்குத் தெருக்களுடன் உள்ளது இந்த வார்டு. பரப்பளவு குறைந்த இப்பகுதியில் 4 ஆயிரத்து 500 வீடுகளுடன் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்திரா நகர் சண்முகலட்சுமி:தெருக்களில் இரவில் செல்ல முடியாத அளவுக்கு நாய்கள் தொல்லை உள்ளது. மழைநீர் வாய்க்கால் நான்கு வார்டுகள் வழியாக செல்கிறது. இதில் தாரளமாக குப்பையை கொட்டுகின்றனர். இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி கழிவுநீராக தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இங்கு உப்புத் தண்ணீருக்கு ஆழ்குழாய் அமைக்க முடியாது. அனைவரும் குடிநீருக்கு மாநகராட்சியையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. அதுவும் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வருகிறது. இதனால் வீடுகளில் குடம்குடமாய் தண்ணீரை பிடித்து சேமிக்கும் நிலை உள்ளது. தெருக்களில் உப்புத் தண்ணீருக்காகவாவது பொதுக் குழாய்களை வைக்க வேண்டும்.சோலை அழகுபுரம் மாரீஸ்வரி: மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர் ரோடு, குடிநீர் வசதிகளை செய்துள்ளனர். அதேசமயம் எனது தந்தை பெயரில் உள்ள வீட்டுப் பத்திரத்தை என் பெயருக்கு மாற்ற முடியவில்லை. புதிய மின் இணைப்பு பெற முடியவில்லை. 1993 முதல் வீட்டுவசதி வாரியத்தில் பணம் செலுத்தி பெற்ற இடத்திற்கு இதுவரை விற்பனைப்பத்திரம் வழங்க வில்லை. ஆனால் ஆண்டுக் கணக்கில் வரி செலுத்தி வருகிறோம். பல முறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பயனில்லை. வீட்டின் பெயரில் வங்கிக் கடன் பெறமுடியவில்லை. வீட்டுப் பத்திரம் வெற்றுத் தாள் போல் தோன்றுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த சிக்கலில் வாழ்கிறோம். இந்த பிரச்னையை யார்தான் தீர்த்து வைப்பரோ தெரியவில்லை.கவுன்சிலர் காவேரி: எங்கள் பகுதியில் தேசிய சாலை புனரமைப்பு திட்டத்தின் கீழ், மோசமான 21 ரோடுகளை ரூ.65 லட்சத்தில் சிமென்ட் ரோடாக அமைத்துள்ளோம். முத்துமாரியம்மன் கோயில் தெரு, இந்திரா நகர் 6வது தெரு, சித்திவிநாயகர் கோயில் தெருவில் 15வது நிதி கமிஷன் திட்டத்தில் ரூ.54 லட்சம் செலவில் பேவர்பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.3 லட்சத்தில் இந்திரா நகரில் சிமென்ட் ரோடு அமைத்துள்ளேன். குடிநீர் சப்ளை, மின்சார தடை போன்ற பிரச்னைகளை தெரிவிக்க வாட்ஸ்ஆப் குருப் வைத்துள்ளேன்.அதில் குறைகளை சொல்வதால் வார்டை உடனுக்குடன் சுத்தமாக வைத்துக் கொள்ள முடிகிறது. நீண்ட கால கோரிக்கையான குடிசைமாற்று வாரியத்தில் பெற்ற வீடுகளுக்கு விற்பனைபத்திரம் பெற அமைச்சர், முதல்வர் வரை மனுக்கொடுத்துள்ளேன். விரைவில் இப்பிரச்னை தீரும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.