| ADDED : ஜன 18, 2024 06:27 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே மதுரை, திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.வடுகபட்டி, தனிச்சியம், அய்யங்கோட்டை நகரி பகுதிகளில் அரசு டவுன் பஸ்கள் சென்று வர சர்வீஸ் ரோடுகள் உள்ளன. வேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போக்குவரத்து விதிகளை மீறி நான்கு வழிச்சாலையில் பஸ்களை நிறுத்துகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள், சாலையை கடக்கும் பயணிகள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. சர்வீஸ் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நான்கு வழிச்சாலையில் வரும் பஸ்சை பார்த்து தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு பெண்கள், முதியவர்கள் ஓடி வருகின்றனர். டவுன் பஸ்களை சர்வீஸ் ரோட்டில் இயக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.