| ADDED : ஆக 21, 2024 04:38 AM
மதுரை : மதுரையில் சொத்து வரியை குறைத்து வசூலித்து முறைகேடு செய்த பில் கலெக்டர்கள் மீது எடுக்கப்பட்ட 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். செயலாளர் முனியாண்டி, நிர்வாகிகள் முருகன், ராஜகோபால், சர்புதீன், அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கல்யாண சுந்தரம், மணிகண்டன், மாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்க வந்தனர். அப்போது கூட்டமைப்பு சார்பில் சங்க தீர்மானம் குறித்த மனு அவர்களிடம் அளிக்கப்பட்டது.பின் நிர்வாகிகள் கூறுகையில், இவ்விவகாரத்தில் தவறு செய்தவர்களை விட்டுவிட்டு தவறு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கமிஷனரிடம் விளக்கினோம். நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர் பதில் அளித்தார் என்றனர்.