| ADDED : மார் 04, 2024 05:49 AM
மதுரை: அம்பானி வீட்டுத் திருமணத்திற்காக குஜராத் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கிய மத்திய அரசு, மதுரை விமான நிலையத்திற்கு தரமறுப்பதேன்''என மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் கூறியதாவது: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு ஜூலை 12ல் திருமணம் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கியுள்ளது, அதிர்ச்சியளிக்கிறது. அதேநேரம் அனைத்து தகுதிகளும் பெற்ற மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஏன் மறுக்கிறது.பிரதமர் மோடி தொகுதி வாரணாசி சர்வதேச விமான நிலையத்தைவிட, ஓராண்டில் மதுரையை பயன்படுத்திய சர்வதேச பயணிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகம்.அதன் பின்னும் மதுரைக்கு வழங்கவில்லை. மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி.,யாக தமிழகம் அதிகம் கொடுக்கிறது. இதனால் எங்களுக்கு உரிமை உள்ளது என்றார்.