| ADDED : நவ 17, 2025 02:12 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் வட்டாரத்தில் செயல்படும் நெல் கொள்முதல் மையங்களுக்கு சட்ட விரோதமாக மின் திருட்டு தொடர்கிறது. இங்குள்ள சின்ன இலந்தைக்குளம், பெரிய இலந்தைக்குளம், குட்டிமேய்கிபட்டி, மணியஞ்சி உட்பட பல கிராமங்களில் நெல் கொள்முதல் மையங்கள் செயல்படுகின்றன. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல்லை துாற்ற, எடை பார்க்க, பில் போட இயந்திரங்கள் உள்ளன. இதற்கு தேவையான மின்சாரத்தை, விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரம், ஊராட்சிகளுக்கு வழங்கிய குடிநீர் மோட்டார்களில் இருந்து எடுத்து பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் கூறியதாவது: ஜல்லிக்கட்டு மைதான ரோட்டில் 3 மையங்கள் 20 நாட்களுக்கு மேலாக செயல்படுகின்றன. இலவச விவசாய மின்சாரம், குடிநீர் மோட்டாருக்கான மின்சாரம், மணியஞ்சியில் நுாலகத்தில் இருந்தும் திருடி பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான மையங்களில் இந்நிலைதான். தி.மு.க., ஒன்றிய, கிளை நிர்வாகிகள் எடுத்துள்ள மையங்கள் என்பதால் மின்வாரியத்தினர் கண்டுகொள்ளவில்லை. கிராம அதிகாரிகளை சரிகட்டி வியாபாரிகள் நெல்லை வாங்கி லாபம் பார்க்கின்றனர். விவசாயிகளிடம் மூடைக்கு ரூ.70 வரை வசூல் செய்கின்றனர். மின் திருட்டால் ஊராட்சி மற்றும் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது என்றனர்