| ADDED : நவ 18, 2025 04:15 AM
மதுரை: மதுரை மேலமடை சந்திப்பு மேம்பாலத்தை டிச.7 ல் முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளதையொட்டி இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மதுரையில் போக்குவரத்து நெரிசலான மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 2023 அக்.30ல் தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன் செல்லும் வழியில், மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின் மேம்பால பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பாலத்தின் நீளம் 1100 மீட்டர். அகலம் 17.20 மீட்டர். அதேபோல பாலத்திற்கு கீழே இருபுறங்களிலும் சர்வீஸ் ரோடுகளும் தலா 7.5 மீட்டர் வடிகால் வசதியுடன் அமைக்கப்படுகிறது. இப்பணிகளை 2025 ஆகஸ்டுக்குள் 21 மாதங்களில் முடிக்க வேண்டும் என அரசு ஒப்பந்தம் செய்தது. பணிதுவங்கிய பின் கோர்ட் வழக்கால் சில மாதங்கள் தாமதமாகி நவம்பரில் பணிகள் முடிகிறது. வரும் டிச.7 ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சிவகங்கை ரோட்டில் ஆவின் சந்திப்பு பகுதியை அடுத்து துவங்கி இப்பாலப் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. இக்கால கட்டத்தில் சிவகங்கை ரோட்டில் போக்குவரத்து தடைபட்டதால், வாகனங்கள் மாட்டுத்தாவணி, அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், வைகை வடகரை, தென்கரை என பல வழிகளிலும் பிரிந்து சந்து பொந்துக்குள் நுழைந்து ரிங்ரோடு சென்றன. அங்கிருந்து சிவகங்கை ரோட்டை அடைந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மனஉளைச்சலில் சென்று வந்தனர். தற்போது பணிகள் முடிந்து இலகு ரக வாகனங்கள், டூவீலர்களுக்கு மட்டும் பாலத்தின் கீழ் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் 22 நாட்கள் உள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் வேகம் பிடித்துள்ளது. பாலத்திற்கு பெயின்ட் அடிக்கும் பணி, சர்வீஸ் ரோடுகளில் விடுபட்ட பணிகள் போன்றவை இரவும், பகலும் நடக்கின்றன.