உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  திருப்பரங்குன்றம் மலை உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம்; உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

 திருப்பரங்குன்றம் மலை உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம்; உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கில், 1920 முதல் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. 105 ஆண்டுகளாக பின்பற்றும் நடைமுறையை தற்போது மாற்ற முடியாது என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அம்மலையில் மாலையில் ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு: கார்த்திகை தீபம் என்பது ஹிந்து பாரம்பரியத்தில் பழமையான, புனிதமான பண்டிகைகளில் ஒன்று. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தின் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. முருகன், சிவபெருமான் கோயில்களில் விழாக்கள் நடைபெறும். அந்தந்த தீபத்துாண் அல்லது மலை உச்சியிலுள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்படும். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா டிச.3 ல் நடைபெற உள்ளது. உயர்நீதிமன்றத்தின் 1996 உத்தரவின் அடிப்படையில் டிச.3 ல் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யுமாறு கோயில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன். மலை உச்சியிலுள்ள (தர்காவிலிருந்து 15 மீ.,தொலைவில்) தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு சட்ட ரீதியாக தடை எதுவும் இல்லை. இது 1920 ல் பிரிவி கவுன்சில் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பழமையான தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பதிலாக, மலையிலுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பழமையான தீபத்துாணை கோயில் நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது. இது பாரம்பரிய இடத்தில் பக்தர்கள் மதச் சடங்குகளை செய்வதை தடுக்கும் நோக்கத்தை குறிக்கிறது. அம்முடிவு சட்ட விரோதமானது. ரத்து செய்ய வேண்டும். மலை உச்சியிலுள்ள பழமையான தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இவ்வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ள மதுரை சோலை கண்ணன், திருவண்ணாமலை அரங்கநாதன் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் மற்றும் சோலைகண்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், குமரகுரு, நிரஞ்சன் எஸ்.குமார்: தீபத்துாணில் தீபம் ஏற்றினால்தான் சுற்றிலும் உள்ள ஊர்களை சேர்ந்த மக்களுக்கு தெரியவரும். உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றினால் மக்களுக்கு தெரியாது. தீபத்துாணில் ஏற்றினால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாது. பிற மதத்தினர் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு, அறநிலையத்துறை தரப்பில்தான் அனுமானத்தின் அடிப்படையில் ஆட்சேபம் தெரிவிக்கப்படுகிறது. இது போன்ற சூழலில் ஹிந்துக்கள் மற்றும் பிற மதத்தினர் இடையே பிரச்னைபோல் சித்தரிக்கப்படுகிறது. அமைதிக்குழு பேச்சுவார்த்தை நடத்தினாலும் தீர்வு ஏற்படுவதில்லை. 105 ஆண்டுகளாக பின்பற்றும் நடைமுறை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், கோயில் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர்: 1920 முதல் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. 105 ஆண்டுகளாக பின்பற்றும் நடைமுறையை தற்போது மாற்ற முடியாது. மலை உச்சியிலுள்ள தீபத்துாணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என மனுதாரர் கோருவதற்கு ஆதாரம் தாக்கல் செய்யவில்லை. பிரச்னையை உருவாக்கும் வகையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் கோரிக்கை தொடர்பாக கோயில் செயல் அலுவலருக்கு அனுப்பிய மனுவில் தீபத்துாணில்தான் ஏற்ற வேண்டும் என குறிப்பிடவில்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். பாரம்பரியமாக ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்றம் 1994 ல் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் மனுவை கோயில் செயல் அலுவலர் நிராகரித்ததை எதிர்த்து அறநிலையத்துறை இணை கமிஷனர் மற்றும் கமிஷனரிடம் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்தது ஏற்புடையதல்ல. அரங்கநாதன் தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன்: மனுவில் கோரிய இதே நிவாரணம் தொடர்பாக ஏற்கனவே தாக்கலான மற்றறொரு வழக்கை 2017ல் இரு நீதிபதிகள் அமர்வு நிராகரித்தது. அதே நிவாரணத்தை மீண்டும், மீண்டும் கோர முடியாது. உச்சநீதிமன்றத்தில்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே இவ்விவகாரத்தை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்துள்ளதால் தற்போது தனி நீதிபதி விசாரிக்க முடியாது. கோயில் பழக்க, வழக்க நடைமுறைகள் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில்தான் தீர்வு காண வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தொல்லியல்துறை, திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்கா நிர்வாகத்தை எதிர்மனுதாரர்களாக சேர்த்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. விசாரணை நவ.24 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார். பின் மாலையில் ஆய்வு செய்தார்.

மலையில் நீதிபதி ஆய்வு

நேற்று மாலை 5:30 மணிக்கு திருப்பரங்குன்றம் வந்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பழைய படிக்கட்டுகள் வழியாக மலைமேல் சென்றார். கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம், அருகிலுள்ள மண்டபம், நெல்லி தோப்பு, மலை உச்சியில் உள்ள தீபத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டார். மலை உச்சியிலுள்ள தீபத்தூணுக்கு அவர் சென்ற பொழுது இருட்டாகி விட்டதால் டார்ச் வெளிச்சத்தில் பார்வையிட்டார். பின்பு அவர் புதிய படிக்கட்டுகள் வழியாக இரவு 7:15 மணிக்கு கீழே இறங்கி வந்து புறப்பட்டார். நீதிபதியுடன் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், உதவி கமிஷனர் சசிப்பிரியா, இன்ஸ்பெக்டர்கள், மதுரை வீரன் ராஜதுரை சென்றனர். ஆய்வு செய்ய நீதிபதி போலீஸ் ஜீப்பில் வந்தார். ஆய்வு முடித்து அவரது காரில் புறப்பட்டார். மலையில் இருந்து இறங்கியபின் உடன் வந்த போலீசாருக்கு தனது காரில் இருந்த தண்ணீர் பாட்டில் கொடுத்து தாகம் தணித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை