ஆக்கிரமிப்பு அகற்றுவதில் விதிமீறல்; தாசில்தாருக்கு ரூ.5000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: சிவகங்கை மாவட்டம் காயாஓடையில் சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட காளையார்கோவில் தாசில்தாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரூ.5000 அபராதம் விதித்தது. காயாஓடை வள்ளி தாக்கல் செய்த மனு: எனது வீட்டின் அருகே உள்ள நத்தம் நிலத்தை நீண்டகாலமாக அனுபவித்து வருகிறேன். அதை நான் ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி அதிலிருந்த வேலியை போலீசாரின் துணையுடன் காளையார்கோவில் தாசில்தார் சில அதிகாரிகளுடன் வந்து அகற்றினார். என்னிடம் விளக்கம் கோரவில்லை. ஆக்கிரமிப்பு சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை. நிலத்திலிருந்து என்னை வெளியேற்ற தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிர மணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: மனுதாரர் அமைத்த வேலியை வருவாய்த்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட போலீசாருடன் சேர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அகற்றியுள்ளனர். போலீசாரின் உதவியுடன், வருவாய்த்துறை அதிகாரிகளால் மனுதாரரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொடர்பான ஆவணங்கள் எங்கள் முன் வைக்கப்பட்டது. மனுதாரரை வெளியேற்ற எந்த முன்னறிவிப்பு நோட்டீசும் அளிக்கவில்லை என்பதை தாசில்தார் முபாரக் ஹுசைன் ஒப்புக்கொண்டார்.வேலியை அகற்றும் போது என்ன நடந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியும். தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 119 ஆண்டுகள் பழமையானது. அது பொது சொத்துக்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடைமுறையை தெரிவிக்கிறது. அச்சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்த தாசில்தாருக்கு அதிகாரம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும். அதிலிருந்து விலகிச் செல்வதை இந்நீதிமன்றத்தால் மன்னிக்க முடியாது. அகற்றுவதற்கு முன் இருந்ததைப் போல் வேலியை சொந்த செலவில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் நிறுவ வேண்டும். மறுசீரமைப்பிற்கு பின் ஆக்கிரமிப்புகளை அகற்ற மனுதாரருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சட்ட நடைமுறையைப் பின்பற்றி அகற்றுவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வர்.தாசில்தார் நடந்து கொண்ட விதத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கிறோம். அதை மனுதாரருக்கு வழங்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து நவ.12ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அபராதமானது தாசில்தாரின் பணியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.