உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாய் நிலத்தில் பஸ் டெப்போ அமைக்க இடைக்காலத்தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

கண்மாய் நிலத்தில் பஸ் டெப்போ அமைக்க இடைக்காலத்தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி குழையிருப்பு கண்மாய் நிலத்தில் போக்குவரத்துக் கழகம் சார்பில் பணிமனை அமைக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சாயல்குடி பாஸ்கரன் தாக்கல் செய்த மனு: சாயல்குடியில் 17.83 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் குழையிருப்பு கண்மாய், வருவாய் ஆவணங்களில் 'ஊரணி' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், மயானம் ஆகியவை அமைந்துள்ளன. 300 குடும்பங்கள் வசிக்கின்றன. கண்மாய் நிரம்புகையில் உபரி நீர், அதற்கான பாதையில் சென்று மூக்கையூர் அருகே கடலில் கலக்கும். ஆனால் உபரி நீர் செல்லும் பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் பள்ளி, குடியிருப்பு பகுதிகளுக்குள் உபரி நீர் புகுந்து நோய்த்தொற்று ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கண்மாய் அமைந்திருக்கும் நிலத்தில் 2.5 ஏக்கரில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பணிமனை கட்டுவதற்கான அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உபரி நீர் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் கண்மாய் நிலத்தில் பணிமனை கட்டினால் பாதிப்புகள் ஏற்படும். நீர்நிலைப் பகுதியில் இது போன்ற பணிகளை மேற்கொள்வது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே பணிமனை கட்ட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.கண்மாய் நிலத்தில் போக்குவரத்துக் கழகம் சார்பில் பணிமனை அமைக்க இடைக்காலத் தடை விதித்து, போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர், ராமநாதபுரம் கலெக்டர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை